Saturday, 6 May 2017

பரிசோதனைப் பதிவு 3 : 24 ஆண்டுகள் 8 மாதங்கள்....!

ரிசில் இருந்து 152 கிலோமீட்டர் வடக்கே உள்ளது Amiens எனும் நகரம். அங்கிருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், தனது 15 வயது மகனை கோபத்தோடு அழைத்து எதையோ சொல்லிக் கண்டிக்கிறார்.



'உனக்கோ சிறிய வயது. இப்போது நீ எடுக்கும் தீர்மானம் சரியாக இருக்காது' என்கிறார் நரம்பியல் பேராசிரியரான அந்தத் தந்தை.

மகன் சொல்பேச்சுக் கேட்கவில்லை..! அமைதியாக இருந்தானே ஒழிய, தனது செயல்பாட்டில் எந்த மாற்றத்தையும் அவன் கொண்டுவரவில்லை. தந்தைக்கு மீண்டும் கோபம். 'இங்கு படித்துக் கிழித்தது போதும். புறப்படு பரிசுக்கு..!' என்கிறார். அவர் பல்கலைக்கழக பேராசிரியர் அல்லவா? இங்கு பரிசில் உள்ள உயர்தர பாடசாலை ஒன்றில் மகனுக்கு இடம் வாங்கிக்கொடுக்கிறார்.
மகனோ படிப்பில் மகா கெட்டிக்காரன். 'பிலோசபி' துறையில் படித்து, புகழ்பெற்ற Nanterre ( நோந்தெர் ) பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றுவிடுகிறான். ( நொந்தேர் என்பதை எங்கட ஆக்கள் 'நந்தியார்' என்று சொல்லுறவை ).

மகன் பட்டம் பெற்றது அப்பாவுக்கு சந்தோஷமாக இருந்தாலும் அந்த 'பழைய' பிரச்சனை அவரை 'அப்செட்' ஆக்கிக்கொண்டே இருந்தது. அதுதான் மகனின் காதல்..!



அவனுக்கு 15 வயதில் காதல் முளைத்துவிட்டதே என்பதைக் கூட அவரால் தாங்க முடிந்தது. ஆனால் தன்னைவிட 24 ஆண்டுகள், 8 மாதங்கள் மூத்த ஒரு பெண்ணை, அதுவும் தனக்கு கற்பித்த ஆசிரியரை அவன் காதலிக்கிறானே என்பதுதான் அவரின் 'அப்செட்' க்கு காரணம்..!

'வெள்ளைக்காரர்கள் மத்தியில் இதெல்லாம் நோர்மல்' என்று நாம் சொல்லிக்கொண்டாலும் உண்மை அதுவல்ல..! அவர்கள் மத்தியிலும் சில பல சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கவே செய்கின்றன.

மகனுக்கு 18 வயது வந்த பின்னர், தந்தை அமைதியாகிக் கொண்டார். அவனோ படித்தது பிலோசபியாக இருந்தாலும் வங்கி ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தான். ஊரில் இருந்த 'காதல் டீச்சரை' பரிசுக்கு அழைத்து வந்து, அவரோடு வாழ ஆரம்பித்தான்.

டீச்சர் அவனுக்கு நன்கு உதவி செய்து, அவனது வெற்றிகளுக்கெல்லாம் பின்புலமாக இருந்தார். இந்த ஜோடி 2007 ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டது. வங்கியில் நல்ல சம்பளம் வாங்கிய அந்த மாணவனுக்கு இப்போது அரசியலில் நாட்டம் வருகிறது. சோசலிசக் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறான்.... மன்னிக்கவும் கொள்கிறார்..! ( இந்த இடத்தில் இருந்து 'ர்' போடுவம்..! கலியாணம் செய்திட்டார் எல்லோ? அதால.! )

அரசியல் நன்கு கை வந்தது அவருக்கு..! 2012 இல் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் அரசு அமைந்தபோது, இவருக்கு உயர் பதவிகள் தேடி வந்தன. அப்படியே 2014 ஆகஸ்டில் பிரான்சின் பொருளாதார அமைச்சராகவும் ஆகிவிடுகிறார். இருப்பினும் அடுத்த ஓர் ஆண்டில் ஜனாதிபதி மீது அவருக்கு நம்பிக்கையை அற்றுப் போகிறது. அரசில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கத் தொடங்கிவிடுகிறார்.

2016 ஆகஸ்டில், அதிரடி அறிவிப்பு ஒன்றுடன் மீண்டும் ஊடக வெளிச்சத்துக்கு வருகிறார். '2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போகிறேன்' என்பதே அந்த அறிவிப்பு. சோசலிசக் கட்சியினர் அதிர்ந்து போகிறார்கள். 'அரசியல் அனுபவம் இல்லாத சின்னப் பெடியன்' என வருணித்தன சில ஊடகங்கள். ஆனால் நம்மாள் 3 ம் நம்பர் ஆச்சே ( பிறந்தது - டிசம்பர் 21 இல் ) மனம் தளரவே இல்லை..!

உடனேயே En Marche எனும் பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். 'திமுக, அதிமுக இரண்டுக்கும் நாமே மாற்று' என்று அண்ணன் சீமான் முழங்குவதைப் போல, 'வலதுசாரி இடதுசாரி இரண்டுக்கும் நாமே மாற்று' என்று முழங்கினார். ஊடகவியலாளர்கள் உருட்டி உருட்டிக் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் 'அதிரடியாய்' பதில் தந்தார்.

மக்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியது.

'யார் இவர்? இவரின் பெயர்தான் என்ன?' என்று இப்போது நீங்கள் கேட்பது போலவே பிரெஞ்சு மக்களும் இவர் குறித்து தேடலாயினர். ஆம் 'அடுத்த பிரெஞ்சு ஜனாதிபதி யார்?' என்கிற பல பத்து கருத்துக் கணிப்புக்களில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் இம்மானுவல் மக்ரோன் தான் அந்த 'பிரான்சின் புதிய நாயகன்'.

பெரும்பாலும் மக்ரோன்தான் அடுத்த ஜனாதிபதி என்று பரவலாகப் பேசப்படுகிறது. பியோன் எல்லாம் பின்னுக்குச் சென்றுவிட்டதால், மேடம் மரின் லு பென்னுக்கும் மக்ரோனுக்கும் இடையில் தான் கடும்போட்டி..!!
இபோது எல்லா ஊடகங்களிலும் மக்ரோன் பேசுகிறார். 'நீங்கள் ஜனாதிபதியாக வந்தால், உங்கள் மனைவியை முன்னிலைப்படுத்துவீர்களா?' என்கிற கேள்வியையும் பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் விட்டுவைக்கவில்லை.

அதற்குச் சிரித்தபடியே 'ஆம் அவரே எனக்கு எல்லாமுமாக இருக்கிறார். அவர் எப்போதும் என் அருகில்தான் இருப்பார்' என்கிறார் இந்த 39 வயது இளம் நாயகன்...!!

8 comments:

  1. கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் மக்ரோன் நிச்சயம் வெல்வார் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க பகவான் ஜீ வாங்க... முதன் முதலாக வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

      மக்ரோன் என்னுடைய ஹீரோ..! என் வாக்கும் அவருக்கே..! அவர் வென்றுவிட்டார். ஐரோப்பா மீண்டும் துளிர்த்தது.

      வருகைக்கு நன்றி ஜீ

      Delete
  2. நீங்கள் உங்களை அறிமுகப்படுத்திக்
    கொண்டிருப்பதைப் போலவே
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதலாவது வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  3. மக்ரோனின் துடிப்பான ஆளுமை அரசியலில் புதிய உத்வேகம் தந்து இருக்கு .இனி வரும் காலம் அவரின் நிறுவாக திறமையை அனைவரும் அறியட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக.. அவரின் ஆளுமை பிரான்சில் புது வரலாற்றை உருவாக்கும்..!

      Delete
  4. ஆகவே தளம் வித்தியாசமான கோணத்தில் பலதையும் தொடர்ந்தும் பகிர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்... தொடர்வோம்.. பயணிப்போம்..!

      Delete