Wednesday 17 May 2017

ஒரு விசித்திரமான வழக்கு

அதோ நீதிபதி 
வந்துவிட்டார்..!

எல்லோரும் எழுந்து 
நிற்கிறார்கள்..!

பொல்லாத நீதிபதியாம்..!
ஒருமுறை தீர்ப்பு சொன்னால்
அதில் மாற்றமே இல்லையாம்..!





நானூறு பேருக்கு
தூக்குத் தண்டனை 
கொடுத்தவராம்..! 
நீதியின் பிறப்பிடமே 
அவர் தானாம்..!

இதோ குற்றவாளியை
இழுத்து வருகிறார்கள்..!

அவனைப் பார்த்தால் 
புல்லைக் கூட 
மிதிக்காதவன் போல்,
ஆம்பளை அன்னை
தெரேசா போல்,
'அப்பாவியாய்
இருந்தான்..!

இதோ அவன் மீதான
குற்றம் வாசிக்கப்படுகிறது..!
'யாரையோ' நேசித்து விட்டானாம்
அதுதான் குற்றமாம்..!

'இருபத்து நான்கு
மணி நேரத்தினுள்
இவனைத் தூக்கிலிடுங்கள்'

நீதிபதி உரத்துக் கூறினார்..!

உங்களிடம் சொல்வதற்கு என்ன?
அந்தக் குற்றவாளியே நான் தான்..!

இதோ 'கடைசி ஆசை' என்ன?
என்று கேட்கிறார்கள்..!

புன்னகை மாறாத முகத்தோடு
தைரியமாய் சொன்னேன்...!!

'என்னவளைப் பிடிக்காதவர்கள்
யாரேனும் இருந்தால் ,
கொண்டுவந்து நிறுத்துங்கள்
பார்க்க வேண்டும் அவர்களை'

நீதிபதி ஆடிப் போனார் :)
நீதிமன்று நிஷப்தம் ஆனது..!

காவலர்களையும் சேவகர்களையும்
ஒற்றர் உளவாளிகளையும் 
ஏவி விடுகின்றனர்..!

எல்லோரும் ஊரூராய் 
அலைந்து திரிகிறார்கள்..!
என்னவளை வெறுக்கும்
ஒற்றை மனிதனையேனும்
கண்டுபிடிக்க அவர்கள்
ஆலாய்ப் பறக்கிறார்கள்..!

முப்பது நாளின் முடிவில்
தோல்வியோடு வந்து 
என்னிடம் சொன்னார்கள்..!

'உன் தண்டனை ரத்தானது
வீடு போய்ச் சேர்' என்று..!

என்னவளை வெறுப்பவர்கள் 
யாருமே இல்லையாம்..!
எல்லோருக்கும் அவளைப் 
பிடிக்குமாம்..!

அவள் உலகத்துக் 
குழந்தைகளின் 
ஒற்றை அன்னையாம்..!
வயோதிபர்கள் எல்லோருக்கும்
வாய்த்த நல்ல செல்ல மகளாம்..!

நீதிமன்றத்தில் எழுதியே
கொடுத்து விட்டார்கள்..!

நீதிமன்றில் விடுதலையாகி
மீண்டும் அவளிடம்

சிறைப்பட்டுக் கொண்டேன்...!! :) :)

2 comments:

  1. அவளிடம் சிறைப்பட்டது அன்பின் தாகத்தில் ))) ஒரு நாள் நிச்சயம் நீதிமன்றமும் திருந்தலாம்)).

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா அதுசரி....நன்றி நேசன் அண்ணா

      Delete