Tuesday, 16 May 2017

பேப்பர் என்பது தமிழா?

ங்கில வகுப்பில் Passive Voice கற்பித்துக் கொண்டிருந்தேன்..! This area is protected by....... என்று ஒரு வசனம்..!

திடீரென்று ஒரு மாணவி கேட்டார்.

"மாஸ்டர், ஏரியா என்று ஏன் தமிழில் சொல்றீங்கள்?"


எனக்குப் புரிந்துபோனது. 'ஏரியா' ஒரு தமிழ்ச் சொல் என்று அந்த மாணவி நினைத்துவிட்டா. பின்னர் நான் தெளிவாக விபரித்தேன். 'நாங்கள்  தமிழ் பேசும்போது ஆங்கிலச் சொற்களும் கலந்துதான் பேசுவோம். ஏரியா என்பது தமிழ் இல்லை. ஆங்கிலம் தான்."

அவர்கள் ஓரளவு பெரிய மாணவர்கள் என்பதால் நான் சொன்னதைப் புரிந்து கொண்டார்கள்.

பிள்ளைகள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. இங்கு வெளிநாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகள் தமிழ்பேச வேண்டும் என்று நாம் எல்லோரும் ஆசைப்படுகிறோம்..! ( அதுவும் நம்மைப் பார்த்து....)

ஆனால் எங்களிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்ளும் தமிழின் 'தரம்' எத்தகையது..?? ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் எங்களால் தமிழ்பேச முடியாது. அதனால் நாம் பேசும் ஏரியா, ஏக்கர், எக்கவுண்ட், பிஸ்கற், லஞ்ச், டினர் எல்லாமே தமிழ் என்று பிள்ளைகள் நினைத்துவிடுகிறார்கள்..!

'ஏரியா' வைத் தொடர்ந்து, இந்தச் சிக்கல் மீண்டும் ஒருமுறை வந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு 6 வயது மாணவனுக்குப் படிப்பிக்கும் போது, Papier எனும் பிரெஞ்சு சொல்லுக்கு ஆங்கிலம் கேட்க, நான் "Paper" என்றேன்.

"இல்ல மாஸ்டர், பேப்பர் தமிழ் தானே" என்றான் அவன்.

"இல்லை பேப்பர் என்பது ஆங்கிலம்தான்"

"இல்ல மாஸ்டர், அம்மா தமிழ் கதைக்கும் போது பேப்பர் பேப்பர் என்று சொல்லுறவா. பேப்பர் தமிழ்தான்" என்றான் விடாப்பிடியாக..!

"சரி" என்று சொல்லிவிட்டு வந்தேன்..'!

எங்கள் "தமிழ் குளறுபடிகளை" எப்படிப் புரிய வைப்பது அந்த 6 வயதுச் சிறுவனுக்கு?
என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்..!!!

----------------------------------------------------------------

குறிப்பு - இங்கு வெளிநாடுகளில் ஆங்கிலமோ, பிரெஞ்சோ, ஜெர்மனோ, ஸ்பானிஸோ எந்தமொழியாக இருந்தாலும் ‘சுத்தமாக’ அந்த மொழியை மட்டுமே பேசுவார்கள். இரண்டு மொழிகளை ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை. ஆனால் நாம்......???

6 comments:

  1. ஆம் காகிதம் என்கிற சொல்
    தமிழகத்திலேயே வழக்கில் இல்லை
    பேப்பர் எனத்தான் பெரும்பாலும்
    சொல்கிறோம்

    இப்படி வெளியிலிருந்து நம்
    பழக்கத்திற்கு வந்த எல்லா
    பொருட்களையுமே ஆங்கில வார்த்தைகளைக்
    கொண்டே குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்

    நீங்கள் சொல்வது போல்
    சிறுவர்களுக்கு புரிய வைப்பது கடினம்தான்

    ReplyDelete
  2. நன்றி ரமணி சார்... நாம் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து பேசுவதால், இங்கு பிறக்கும் பிள்ளைகள் நாம் பேசும் ஆங்கிலச் சொற்களையும் தமிழ் என்றே நினைத்துவிடுகிறார்கள்.

    ReplyDelete
  3. உண்மை நண்பா நாம் மட்டும்தான் தமிங்கிலீஷ் பேசி குழந்தைகளை குழப்புகின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. அதேதான் நண்பா.... நம்மால் இனி மாற முடியாது. நம் அடுத்த தலைமுறையாவது மாறட்டும்

      Delete
  4. தூயதமிழ் என்பது எத்தனை தூரம் சாத்தியம் ?இன்றைய ஊடகங்களில் கூட எத்தனை மொழிக்கலப்புக்கள்))) அடுத்த சந்ததிக்கு எதைக்கொடுக்கப்போகின்றோம் என்பதே தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தூய தமிழ் சாத்தியம் இல்லை என்பது இப்போதைய தலைமுறையினராகிய எமக்கு சாத்தியமே இல்லை..! ஆனால் வருங்கால சந்ததிகள் அதனைக் கடைப்பிடிக்க விரும்புவார்கள். ஆனால் நாம் வழிகாட்டிகளாக இருப்போமா? என்றால்....

      இல்லை என்பதே பதில்..!!

      Delete