Tuesday 2 May 2017

பரிசோதனைப் பதிவு 1 : தமிழில் 24 மணிநேர செய்தி வானொலி...!

ப்படி ஒரு வானொலி வராதா? என்பது எனது நீண்டநாள் ஆசை.

தமிழில் 100 க்கும் மேற்பட்ட வானொலிகள் உள்ளன. இதில் ஈழத்தமிழர்கள் நடத்தும் வானொலிகள்தான் அதிகம். 24 மணிநேரமும் இந்த 100 வானொலிகளும் செய்யும் ஒரே வேலை - பாட்டு போடுவதும், 'சாப்பிட்டீங்களா? குளிச்சீங்களா? நித்திரை கொண்டீங்களா?' வகையறா கேள்விகள் கேட்பதும்தான். உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கு இப்ப 'சாப்பிடுவதும் குளிப்பதும்தான்' பிரச்சனையா?



'பாட்டு போட்டாலே சனம் கேட்காது. இதில 24 மணிநேரமும் செய்தி வேறயா? இப்படியான வானொலியை யாராவது கேட்பார்களா?

என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், உங்களுக்கு 'விஷயம் தெரியாது' என்று அர்த்தம். 'உங்களிடம் ஐடியா இல்லை' என்று அர்த்தம்..!

பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் வேறுசில உலக மொழிகளிலும் 24 மணிநேர செய்தி சேவை உண்டு. அவற்றை பல மில்லியன் மக்கள் கேட்கிறார்கள். தெளிவாகச் சொல்லுவதானால் பல மில்லியன் மக்கள் கேட்கும் விதமாக வானொலியில் விஷயங்களை ஒலிபரப்புகிறர்கள்.

மனிதர்களுக்கு இருக்கும் பசிகளில் பிரதானமானது 'தகவல் பசி'. அதை நன்கு புரிந்துகொண்டு மேற்சொன்ன வானொலிகள் தகவல் மழை பொழிகின்றன.

ஒரு இடத்தில் ஒரு குண்டு வெடிக்கிறதா? அடுத்தநொடியே 'அந்த இடம் எப்படியானது? அங்கு எவ்வளவு மக்கள் வந்து போவார்கள்? எத்தனை சாவு? காயம்? குண்டு வெடிக்கும் போது அருகில் இருந்தவர்களின் வாக்குமூலம், குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட இதர பாதிப்புக்கள்' என்று பல நூறு தகவல்களை தந்துகொண்டே இருப்பார்கள்.

அடுத்து வானொலிக்காக செய்தி எழுதுவதற்கும் அதனை வாசிப்பதற்கும் ஒரு முறை உண்டு. ஞாயிற்றுக்கிழமை வீரகேசரியில் வரும் கட்டுரை போல செய்தி எழுதுவதும், அதனை செய்தி வாசிப்பின் தாற்பரியமே தெரியாத அறிவிப்பாளர்களிடம் வாசிக்கக் கொடுப்பதும், அவர்கள் செய்தியை 'சாவு அறிவித்தல்' போல வாசிப்பதும் என்று இருந்தால் யாராவது வானொலி கேட்பார்களா?

ஒருவர் செய்தி வாசிக்க லாயக்கு உள்ளவரா? என்பது உலக தலைவர்களின் பெயர்களை அவர் உச்சரிப்பதைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். சிலர் செய்தியை வேகமாக வாசித்துக் கொண்டு போவார்கள். நடுவில் 'அங்கோலா ஜனாதிபதி....' என்று வந்தால் அந்த இடத்தில் பிரேக் அடிப்பார்கள். பின்னர் 2, 3 செக்கன்கள் கழித்து ஜனாதிபதியின் பெயரை முக்கித் தக்கி சொல்வார்கள். அறிவிப்பாளர்களின் இந்த தடுமாற்றத்துக்கு, செய்தி எழுதிக் கொடுப்பவர்களின் லட்சணமும் ஒரு காரணம்..! ( செய்தி வேறு கட்டுரை வேறு )

இப்படியாக பலநூறு விஷயங்களும் டெக்னிக்குகளும் இந்த துறையில் உள்ளன. செய்தி வாசிப்பவர்களுக்கு சீன, கொரிய இராணுவத்துக்கு வழங்கப்படுவது போல கடும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்..!

தமிழில் இப்படியான ஒரு வானொலி வர வேண்டும். உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் மக்களின் சகல செய்திகளையும் அது சொல்ல வேண்டும். நமது தமிழர்கள் இல்லாத இடமே இல்லை. அம்பகாமத்தில் யானைத் தொல்லையா? அப்பிள் கொம்பனியில் தமிழ் இஞ்சினியர்கள் வேலை செய்கிறார்களா? எல்லோரையும் வானலைக்கு கொண்டுவர வேண்டும்..!

இந்தப் பெரிய பிரெஞ்சு வல்லரசில் தேர்தல் நடக்குது. நாங்கள் மக்ரோனா? லு பென்னா? என்று குழம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் எங்கள் ஊடகங்கள் பாகுபலி பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றன. சினிமா மோகத்துக்குள் இருந்து வெளிய வர விடமாட்டீங்க போல கிடக்கு..!!

தமிழில் 24 மணிநேர செய்தி சேவை காலத்தின் கட்டாயம். அதை "சரியான முறையில்" யார் செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

காத்திருப்போம்...!!!

2 comments:

  1. தங்கள் ஆதங்கமும்
    எதிர்பார்ப்பும் சரியே
    பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார்... பொறுத்திருந்து பார்ப்போம்

      Delete