Friday 5 May 2017

பரிசோதனைப் பதிவு 2 : மக்ரோன் Vs லு பென் - அனல் பறந்த தொலைக்காட்சி விவாதம் - ஒரு பார்வை

12 கமெராக்கள், 19 பாகை வெப்பநிலை நிலவிய அரங்கு, 2.5 மீட்டர் நீளமான மேசை - அதன் வலதுபுறத்தில் இம்மானுவல் மக்ரோனும் இடதுபுறத்தில் மரின் லு பென்னும் அமர்ந்திருக்க, வரலாற்று முக்கியத்துவம் மிக்க தொலைக்காட்சி விவாதம், நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிற்று.


TF1, France2, BFMTV, Cnews என பிரான்சின் முன்னணித் தொலைக்காட்சிகள் அனைத்துமே இந்த விவாதத்தை ஒளிபரப்ப, RMC, RTL, France info, RFI என சக வானொலிகளும் ஒலிபரப்ப, 20 க்கும் மேற்பட்ட Youtube Channel இல் Live கள், ஃபேஸ்புக் லைவ்கள் என திரும்பும் திசை எங்கும் ஆக்கிரமித்து நின்றது இந்த அதிரடி விவாதம்.


இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களினதும் சொல்லாடல்களில் சிக்கி, தடுமாறிய அந்த இரண்டு தொகுப்பாளர்களும் பாவம்..! S’il vous plaît ( Please ) சொல்லியே களைத்து விட்டார்கள். France2 தொலைகாட்சியைச் சேர்ந்த Nathalie Saint-Cricq மற்றும் TF1 தொலைக்காட்சியைச் சேர்ந்த Christophe Jakubyszyn ஆகியோரே அந்த தொகுப்பாளர்கள். முன்னதாக இரண்டு ஆண் தொகுப்பாளர்கள்தான் இந்த விவாதத்தை நெறிப்படுத்துவதாக இருந்தது.

ஆனால் பிரெஞ்சு இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகிய CSA ’ஒரு பெண் தொகுப்பாளரைச் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டதால், நத்தாலிக்கு அந்த வாய்ப்பு வந்தது. நத்தாலி இயல்பிலேயே கண்டிப்பானவர். இலகுவில் டென்சன் ஆகிவிடுவார். நேற்றும் முகத்தில் அவ்வப்போது கோபம் எட்டிப் பார்த்தாலும் சமாளித்துக் கொண்டிருந்தார்.

இரண்டு தொகுப்பாளர்களும் 60 கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால் கேட்டது என்னவோ 10 வரையான கேள்விகள்தான். ஒவ்வொரு கேள்வியையும் கேட்பதற்கு கெஞ்சி கெஞ்சி அனுமதி வாங்கியதுதான் சோகம்..!

லு பென்னும் மக்ரோனும் மாறி மாறி விளாசியதை நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள். லு பென் ‘உப்புச் சப்பில்லாமல்’ ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். தற்போதைய ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் ஆட்சிக்கால தவறுகள் யாவற்றையும் மக்ரோனின் தலையில் கட்டிவிடவே அவர் துடித்தார். ஆனால் நம் இளம்புயல் மக்ரோன் வெகு சாமர்த்தியமாக அவற்றைத் தடுத்தாடி, வாதங்களை முன்வைத்தார்.

விவாதத்தின் நடுநடுவே பொருத்தமில்லாத உடல்மொழிகளையும் ‘சமாளிப்புச் சிரிப்புக்களையும்’ லு பென் வெளிப்படுத்தியதை பிரெஞ்சு மக்கள் ரசிக்கவில்லை. மேலும் விவாதத்தின் முதலில் பேசுவது லு பென் என்றும் கடைசியில் முடித்து வைப்பது மக்ரோன் என்றும் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வரைமுறையையும் லு பென் மீறினார்.

கடைசி இரண்டு நிமிடங்களில் மிகவும் சாந்தமான குரலில் ‘நீங்கள் இந்த நாட்டுக்குப் பொருத்தமில்லாதவர். உங்களிடம் திட்டங்கள் ஏதும் இல்லை’ என்று மக்ரோன் தனது கருத்தை ஆணித்தரமாக முன்வைக்க, டென்சன் ஆன லு பென் ‘சின்ன ஒலோந்து’ என்று மீண்டும் மக்ரோனைச் சீண்ட, அவரும் சிறிது கோபப்பட்டு ‘நீங்கள் இங்கு தொலைக்காட்சியிலேயே இருந்து கொள்ளுங்கள். எனக்கு நாட்டை வழிநடத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது' என்று கடுப்போடு கூறி முடிக்க, தொகுப்பாளர்கள் இருவரும் படாதபாடு பட்டு நிகழ்ச்சியை முடித்தனர்.

நத்தாலி ‘Au revoir' சொன்ன விதமே ‘ஐயோ எங்கள விடுங்க சாமி’ என்பது போல இருந்தது.

உலக ஜனநாயகத்தின் அதி உச்ச குறியீடு என வருணிக்கப்படும் இந்த நேரடி தொலைக்காட்சி விவாதம் பிரான்சின் பெருமைமிக்க ஒரு அடையாளம் ஆகும். இதனை உலக ஊடகவியலாளர்கள் பலரும் டுவிட்டரில் பாராட்டிக்கொண்டே இருந்தார்கள். ’பிரெஞ்சுத் தொலைக்காட்சிகளிடம் இருந்து நாம் நிறையவே கற்க இருக்கு’ என்று பிபிசியின் கிழக்குப் பிராந்திய செய்தியாளர் ஒருவர் டுவிட்டரில் எழுத, அதை பிபிசி கோடிட்டுக் காட்டியது.

இந்த விவாதத்தின் வெற்றியாளர் மக்ரோனே என்று இன்று அதிகாலை வெளியான கருத்துக் கணிப்பு உறுதி செய்தது.

வேறு கேள்விகளுக்கும் இடமில்லாமல் - பிரான்சின் அடுத்த ஜனாதிபதியும் அவரே......!!!!


1 comment:

  1. பரிசோதனைக் கருத்துரை

    ReplyDelete