Wednesday, 14 June 2017

அந்த ஒரு நொடிக்காக....!!

நம்ம ஏரியா  தளத்திலே கருவுக்கு கதை எழுதும் போட்டிக்கு அழைத்திருந்தார்கள். அதில் சொல்லப்பட்ட கருவை எடுத்து, என் கற்பனையைச் சேர்த்து எழுதியதை இங்கே தருகிறேன் நண்பர்களே...!!

நம்ம ஏரியா Team க்கு எனது நன்றிகள்.



’இல்லை டொக்டர், அந்த லேடி ஆட்சிக்கு வாறது கஷ்டம்.. அதுக்குச் சான்சே இல்லை’ என்று கூறிய விமலன், மீண்டும்  மருத்துவர் கோபியிடம் ‘அதுசரி உங்க ஊரில் இப்ப அடிக்கடி குண்டுகள் வெடிக்குதே.. நீங்கள் தானே ஐரோப்பிய ஒன்றியம் வேண்டாம் என்று பிரிஞ்சு போனீங்க’ என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

அவன் சொன்னதில் உள்ள உள் அர்த்தம்  மருத்துவர் கோபிக்குப் புரிந்ததோ இல்லையோ,  சுசிக்கு நன்கு புரிந்துவிட்டது.  அவள் அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்தாள்.

மருத்துவர் கோபியும் அவரது மனைவி சுசியும் பிரித்தானியாவில்  இருந்து விடுமுறையில் பிரான்சுக்கு வந்திருக்கிறார்கள். பிரான்சில் உள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க தமக்கு ஒரு வழிகாட்டி ( Guide )  வேண்டுமென அவர்கள் இணையத்தில் தேடிய போது ‘அரூபன்’ எனும் தமிழ் பெயர் தென்பட, அவனைத் தேர்ந்தெடுத்தார்கள். A வரிசையில் தொடங்கும் பெயர்கள் சுசிக்குப் பிடிக்கும் என்பதால், அரூபனை அவளே தேர்வு செய்தாள்.

ஆனால்,  பரிசின் சாள் து கோல் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது, எதிரே வந்து நிறக்கப் போவது  ‘அரூபன்’ எனும் புதிய பெயர் கொண்ட, தனது முன்னாள் கணவன் விமலன் என்பதைச் சுசி அறிந்திருக்கவில்லை. பல வருடங்களின் பின்னர் இருவரும், நேரில் சந்தித்தபோது உள்ளூர அதிர்ந்து போயினர். சுசிக்கு A என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் பிடிக்கும் என்பதால், தனது பெயரை ‘அரூபன்’ ஆக்கியிருந்தான் விமலன்.

‘வாங்கோ, இந்த ரெயினைப் பிடிப்பம். இது நேர பரிசுக்குத்தான் போகுது’ என்று கூறிய விமலன், ரோஸ் நிற அழகிய ரெயினில் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு பரிஸ் நோக்கிச் சென்றான்.

‘ட்ரெயின் இவ்வளவு அழகா இருக்கு. ஐ ரியலி லைக் இட்’ என்றார் மருத்துவர் கோபி. இதே ட்ரெயினில் முன்னர் விமலனும் சுசியும் பல இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார்கள். இதே ட்ரெயினில் அவர்களுக்கு ஒரு வரலாறே இருக்கிறது.


கோபியும் சுசியும் அருகருகே அமர்ந்திருக்க, எதிரே விமலன் அமர்ந்திருந்தான். விமலனின் கடகட பேச்சு கோபிக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. எந்த தகவலைக் கேட்டாலும் மள மளவென்று சொல்லிகொண்டே வந்தான். சுசி எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள். தங்களுக்கான டூரிஸ்ட் கைட் ஆக விமலன் வருவான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

பல வருடங்களுக்கு முன்னர்,  விமலனும் சுசி என்கிற சுசித்ராவும் ஃபேஸ்புக்கிலே ஒருவரோடு ஒருவர் பழகி, காதலித்து திருமணம் முடித்திருந்தார்கள். அப்போது விமலனுக்கு பிரான்சிலே வதிவிட அனுமதிப் பத்திரமோ பாஸ்போட்டோ எதுவுமே இருந்திருக்கவில்லை. பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கி, ஒரு சாதாரண வேலை செய்து கொண்டிருந்தான்.

ஆனால் சுசி அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. பிறப்பில் இருந்தே அவள் வசதியானவளாக இருந்தமையால், அவளால் பிரான்சுக்கு அடிக்கடி வந்து போகவும் விமலனோடு நினைத்த இடங்களுக்குப் போய்வரவும் முடிந்தது. காதல் வானிலே இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள். பிரான்சிலே அவர்கள் சுற்றித் திரியாத இடமே இல்லை.

விமலனுக்கு வதிவிட அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அதனால் சுசியே அடிக்கடி பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு வந்து போக வேண்டி இருந்தது. திருமணம் செய்தும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாமல், தனித்தனி நாடுகளில் இரு காதல் பறவைகளும் சிக்கிக் கிடந்தன. இதுவே காலப்போக்கில் அவர்களுக்கு இடையிலான விரிசலுக்கும் காரணமாயிற்று.

‘பிரெஞ்சு நல்லா கதைப்பீங்க போல’

மருத்துவர் கோபி கேட்ட கேள்விக்கு, சிரித்துக் கொண்டே பதில் சொன்ன விமலன் ‘ஓம் சேர், இப்ப நஷனலிட்டியும் எடுத்திட்டன். பிரெஞ்சும் ஒருவருஷம் தொடர்ந்து படிச்சனான்’ என்றான்.

‘என்னை ஏன் சேர் என்று கூப்பிடுறீங்க..? அண்ணா என்று கூப்பிட்டாலே போதும்’ என்ற கோபி, ‘பிரெஞ்சு அரசியலும் அத்துப்படி போல’ என்றார்.

அதற்கு ஏதோ பதில் சொல்ல விமலன் முயன்றபோது, அவனது மொபைலுக்கு பிரான்சின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்திருந்தது.

‘ஐயோ... ...சந்துவானில ( பிரான்சில் உள்ள ஒரு நகரம் ) இருக்கிற ஒரு சேர்ச்சுக்குள் பயங்கரவாதிகள் புகுந்திட்டாங்களாம்’ என்று பரபரப்போடு சொன்ன விமலன், ‘இருங்கோ ஒரு நிமிஷம்’ என்று கோபியிடம் கூறிவிட்டு, பிரெஞ்சு மொழியில் வந்திருந்த செய்தியை மின்னல் வேகத்தில் வாசித்து, தனது மொபைலில் வேகமாக தமிழிலே டைப் பண்ணத் தொடங்கினான்.

மூன்று நிமிடங்களில் மளமளவென்று ஒரு செய்தியை தயார் செய்து, அதனை ஆறு செக்கன்களில் மீள வாசித்து சரி பார்த்துவிட்டு, யாருக்கோ அனுப்பிவிட்டு நிமிர்ந்தான்.

‘சொறி, குறை நினைக்காதேங்கோ, பிரேக்கிங் நியூஸ் வந்தது. அதான் செய்தி ரெடி பண்ணின்னான்’ என்றான்.

அவன் ஏதோ ஒரு மீடியாவில் வேலை செய்கிறான் என்பதை கோபி ஊகித்தார். அவருக்கும் நாட்டு நடப்புக்கள், மீடியாக்கள் இவற்றில் மிக்க ஆர்வம்.

‘இப்படித்தான் எனக்கும் போனில நோட்டிபிகேஷன் வாறது. நான் இவவுக்கு எல்லா நியூசையும் படித்துக் காட்டுறனான். அதுசரி நீர் எத்தினை வேலை செய்யிறீர்?’ என புன்னகையுடன் கேட்டார் கோபி.

‘டூரிஸ்ட் கைட் வந்து,  பார்ட் டைம் வேலை. மீடியாவில வேலை செய்யிறதும் பார்ட் டைம் தான். அதோட இன்னொரு வேலையும் செய்கிறேன்’ என்றான் விமலன். அவனது குரலில் ஓர் உற்சாகம் பற்றியிருந்தது.

சுசிக்கு உள்ளூர சிரிப்பாகவும் வியப்பாகவும் இருந்தது. விமலனின் திறமைகளை நன்கு அறிந்தவள் அவள். அவனை பிரித்தானியாவுக்கு அழைத்து, படிப்பித்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பது அவளின் கனவாக இருந்தது. ஆனால் ஏதோ கெட்டநேரம், அவர்கள் இருவரையும் விதி பிரித்து வைத்து வேடிக்கை பார்த்தது.

சுசியைப் பிரிந்த பின்னர் விமலன் மிகவும் வாடிப்போய் இருந்தான். அவனுக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது. எத்தனையோ முறை சுசியோடு பேச முயன்றும் அவை எதுவுமே சரிவராமல் விரக்தியில் அலைந்தான். என்றாலும் அவனின் தன்னம்பிக்கை அவனை விட்டுவிடவில்லை. ‘கடமையைச் செய்.. பலனை எதிர்பாராதே’ என்கிற கண்ண பிரானின் போதனையை மனதிலே நினைத்துப் பார்த்தான்.

ஜிம்முக்குப்  போக ஆரம்பித்தான். சுசியைப் பிரியும் போது அவன் 90 கிலோவில் இருந்தான். இப்போது ஓயாமல் ஜிம்முக்குப் போய், 75 கிலோவில் வந்து நின்றான். பிரெஞ்சு மொழியை இராப்பகலாகப் படித்து, சேர்ட்டிபிக்கேட் வங்கி, பிரெஞ்சுக் குடியுரிமையும் பெற்றுவிட்டான். முடிந்தவரை மகிழ்ச்சியாக இருப்பது எனத் தீர்மானித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தான்.

என்றாலும் சுசியின் பிரிவு அவனை வாட்டவே செய்தது. என்றாவது ஒருநாள் அவளைக் காண வேண்டும் என ஆசைப்பட்டுக்கொண்டே இருந்தான். முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வரும் போதெல்லாம் ‘இனிமேல் உங்களோட கதைக்க மாட்டன்’ என்று சுசி கூறுவாள். அதற்குச் சிரித்துக்கொண்டே விமலன் கூறுவான் ‘நீங்க கதைக்காட்டி எனக்கென்ன? ஒரு நாள் இருந்து பாருங்கோ, உங்கட வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் நான் வாடகைக்கு குடிவந்து  ஜன்னலுக்குள்ளால உங்களையே பார்த்துக் கொண்டு இருப்பன்.’

ரோஸ் நிற தொடரூந்து பரிசில் உள்ள Gare du Nord தொடரூந்து நிலையத்தில் வந்து நின்றது. அவர்கள் லகேஜை இறக்க விமலன் உதவினான். எதிரே இருந்த ‘ibis style hotel இல் அவர்கள் ரூம் புக் பண்ணியிருந்தார்கள்.

‘ஓகே டொக்டர், நாளைக்குப் பார்ப்பம். நல்லா ரெஸ்ட் எடுங்கோ’ என்று கூறிவிட்டு, சுசியை ஏறெடுத்தப் பார்த்தான் விமலன். அவளது முகத்தில் பயணக் களைப்பை மீறிய ஒரு உணர்வு படர்ந்திருந்தது. அவள் மெல்ல தலையாட்டி விடை கொடுக்க, அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று மறைந்தான் விமலன்.

** ** **

சுசிக்கு தூக்கம் வரவே இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து விமலனைச் சந்திக்க நேரிடும் என்று அவள் நினக்கவே இல்லை. தாம் பிரிந்ததுக்கு விமலனே காரணம் என்று அவள் முழுமையாக நம்பினாள். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அளவுக்கு மீறி ரிஸ்க் எடுத்து, விமலனைக் காதலித்து திருமணம் செய்ததையும், உறவினர்களின் எதிர்ப்பை அவள் சமாளித்த விதத்தையும் அவள் எண்ணிப் பார்த்தாள். விமலனுக்காக இவ்வளவும் செய்தும் அவன் தன்னை உதாசீனப்படுத்திவிட்டான் என்பது சுசியின் கோபமாக இருந்தது.

அவனைப் பிரிந்த பின்னர் அவன் குறித்து அறிந்து கொள்வதில் எதுவித ஆர்வமும் இல்லாதிருந்தாள் சுசி. தேவையற்ற விஷயங்களை தலையில் போட்டால் துயரமே மிஞ்சும் என்று அவள் நினைத்திருந்தாள். என்றாலும் தன்னைப் பிரிந்த பின்னர் விமலன் மிகவும் மனம் ஒடிந்து இருப்பதாகவும் தாடியுடன் திரிவதாகவும் தோழி அஞ்சலா மூலம் சுசி அறிந்து கொண்டாள்.

ஆண்டுகள் செல்ல, சுசிக்கு மருத்துவர் கோபியுடன் திருமணம் ஆயிற்று. அவளது பெற்றோர் பார்த்த படித்த மாப்பிள்ளை அவர். அவரது நல்ல குணமும் மென்மையான பேச்சும் அவளுக்குப் பிடித்துப் போகவே, கோபியைத் தன் கணவனாக ஏற்றுக் கொண்டாள் சுசி.

சில காலம் பார்த்துவிட்டு யாராவது ஒரு பெண்ணை விமலன் திருமணம் செய்துவிடுவான் என்று சுசி நினைத்திருந்தாள்.

ஆனால் இத்தனை ஆண்டுகள்  ஆகியும் அவன் திருமணம் செய்யாமல் இருக்கிறான் என்றவுடன் சுசி அதிர்ந்தே போனாள். தன்னைப் பிரிந்த பின்னர், இடிந்து போய்விடாமல் விமலன் முன்னேறியிருப்பதும், மொழி, தொழில், அறிவு போன்றவற்றில் வளர்ந்திருப்பதையும் எண்ணி அவனை மனதுக்குள் வாழ்த்தவும் செய்தாள்.

மறுநாள் காலை விமலன் இவர்கள் இருவரையும் ஏதோ ஒரு மியூசியத்துக்கு அழைத்துச் செல்ல இருக்கிறான். நாள் முழுவதும் அவன் இவர்களோடுதான் இருப்பான். நாளைய பொழுதை எப்படிக் கழிப்பது என்று சுசி சிந்திக்கலானாள்.

விமலனும்  கோபியும்  பேசும் போது இவளும் சம்பிரதாயத்துக்குத் தலையாட்டினாளே தவிர, எதுவுமே பேசவில்லை. விமலனும் இவளுடன் பேச முற்படவில்லை.

** **

Gare du Nord தொடரூந்து நிலையத்துக்குள் வேகமாகப் புகுந்த விமலன், அங்கிருக்கும் மலசல கூடம் ஒன்றினுள் நுழைந்தான். கதவை இறுகச் சாத்திய அந்தக் கணத்தில் அவனது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. அவன் விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். அவன் இத்தனை ஆண்டுகள் காத்திருந்த அந்த அற்புத தருணம் வந்துவிட்டது. சுசியை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அவன் வேண்டாத தெய்வமே இல்லை.

சுசியப் பிரிந்த இந்த 10 ஆண்டுகளில் விமலன் அவளின் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவள் அனுப்பிய கடிதங்களை  மீண்டும் மீண்டும் படிப்பதும், அவள் கொடுத்த அன்பளிப்புப் பொருட்களை அடிக்கடி எடுத்துப் பார்ப்பதும் என்று அவளைச் சுற்றியே அவனது நினைவுகள் இருந்தன.

இன்று அவளை நேரில் கண்டதும் அவன் உருகிப் போனான். சாள் து கோல் விமான நிலையத்தில் வைத்தும் அவனது கண்கள் கசிந்தன. அதை தெரியாமல் மறைத்துக் கொண்டான். கைகள் நடுங்கின.. அதையும் சமாளித்து, புன்னகைத்து, மருத்துவர் கோபியிடம் வேண்டுமென்றே நிறையப் பேச்சுக்கொடுத்து, கதைத்துக் கொண்டு வந்தான். ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாலும் அவன் அழுதிருப்பான்.

45 நிமிடம்  அழுதுவிட்டு, முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தான் விமலன். அவனது மனது ஏனோ வெறுமையாக இருந்தது. என்றாலும் சுசியைப் பார்த்த மகிழ்ச்சியும் அவன் மனதில் இருந்தது. அவள் இன்னொருவரின் மனைவி ஆகிவிட்டாள்.  என்ன செய்வது?

** **

காலை 9 மணியாகி விட்டது. கோபியும் சுசியும் குளித்து அன்றைய நாள் சுற்றுலாவுக்குத் தயாராக இருந்தார்கள். சுற்றுலா வழிகாட்டி விமலன் வரும் நேரம் அது. சுசியின் இதயம் ஏனோ படபடப்பாக இருந்தது. ‘அந்த தம்பிய இன்னும் காணேல’ என்றார் கோபி.  சுசி எதுவுமே சொல்லவில்லை.

நேரம் 9.10 ஆகியது. விமலன் இன்னும் வரவில்லை. ‘ஆள் நாலைஞ்சு வேலை செய்யிறார் தானே? எங்கோ நடுரோட்டில் நின்று செய்தி எழுதுகிறாராக்கும்’ என்ற கோபி, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். எதிரே இருந்த Gare du Nord தொடருந்து நிலையத்தில் ஏதோ பரபரப்பு. மக்கள் அங்கும் இங்கும் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டனர்.

அதற்குள் நாலைந்து அம்பியூலன்ஸ்கள் மின்னல் வேகத்தில் வர எங்குமே பரபரப்பு. படிவழியே கீழே இறங்கி வந்த கோபி, எதிரே வந்த இரண்டு பிரித்தானிய பெண்களிடம் ‘என்ன நடக்குது அங்கே’ என்று விசாரித்தார்.

‘யாரோ ஒருத்தன், லண்டனுக்குப் போற யூரோஸ்டார் ட்ரெயினுக்கு முன்னால் பாய்ந்து தற்கொலையாம்’

என ஆங்கிலத்தில் கூறிய அப் பிரித்தானிய பெண்கள்,  பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

( யாவும் கற்பனையே )

32 comments:

  1. //45 மணிநேரம் அழுதுவிட்டு//

    4.5 மணிநேரம்? 4, 5 மணிநேரம்?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஶ்ரீராம்...! அது 45 நிமிசம். தவறுதலாக எழுதிவிட்டேன். மாற்றுகிறேன்.

      Delete
  2. கதை அருமை. முடிவைத் தவிர!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ :)

      முடிவு - இதில் விமலன் தான் இறந்தவர் என்று உறுதியாகச் சொல்லாமல் வாசகர்கள் தமக்குத் தோன்றும் முடிவை ஊகிக்க விட்டிருக்கிறேன் சகோ :) :) :)

      எங்கு விபத்து நடந்தாலும் அங்கு செய்தி சேகரிக்கச் செல்வது விமலனின் வேலை. அதனால் அவன் விபத்து நடந்த இடத்தில் இருந்து செய்தி சேகரித்திருக்கலாம் :)

      Delete
  3. Replies
    1. பிறகு என்ன ஜி, கதை முடிஞ்சுது :) :)

      Delete
    2. நான் பிறகு வருவேன் என்று சொல்லிச் சென்றேன்.

      இப்பொழுதுதான் கதையை படித்தேன் முடிவில் இறந்தது அவன்தானா ? என்ற குழப்பத்தை வாசகர்களுக்கு கொடுத்தது நல்ல யோசனை. வாழ்த்துகள் றஜீவன்.

      Delete
    3. வாங்கோ கில்லர்ஜி.

      'பிறகு' என்பதை, கதையின் மிகுதி என்ன? என்று கேட்கிறீர்களோ என்று நினைத்தேன். :) :)

      அந்த வாழ்த்துக்கு நன்றி ஜி. இதுதான் முடிவு என்று அடித்துச் சொல்லாமல் ஒரு ஊகத்தில் விடுவது எனக்கும் பிடித்த ஒரு முறை. அதனால் தான் அப்படி எழுதினேன் ஜி.

      Delete
  4. நன்றாகப் போன கதை! முடிவு தான் சரியில்லை! :( இத்தனை கோழையாக விமலன் இருந்திருக்க வேண்டாமோ! ஒரு பெண் தன்னை நிராகரித்தால் மரணம் தான் தீர்வா? வாழ்ந்து காட்டுதல் அன்றோ தீர்வு? முடிவு பிடிக்கலை.

    அதோடு ஶ்ரீராம் சொன்ன //45 மணி நேரம் அழுது விட்டு// அதைத் திருத்துங்க. 45 நிமிஷம்னு வந்திருக்கணுமோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீத்தா.. முடிவு பற்றி மேலே ஸ்ரீராமுக்கு எழுதியிருக்கிறேன். :)

      அது விமலனின் முடிவுதான் என்று உறுதியாகச் சொல்லப்படவில்லை :)

      கதையில் வரும் சுசி கேள்விப்பட்டா ‘ஐயோ விமலன்’ என்று ஒரு கணம் ஷொக் ஆவா. அதைப் போல வாசகர்களும் ஷொக் ஆகட்டும் என்று விட்டுவிட்டேன் :)

      Delete
  5. கதை அருமை! இறந்தது விமலன் இல்லை என்று குறிப்பாலாவது உணர்த்தியிருக்கலாம். இல்லாவிட்டால் வாசகர்கள் விமலன் என்றுதான் புரிந்து கொள்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி மேடம். முதல் முறையாக வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

      தற்கொலை செய்யும் அளவுக்கு விமலன் கோழை இல்லை என்பதை முன்னைய வரிகளில் ஓரளவுக்கு எழுதிவிட்டுத்தான் முடிவை இப்படி எழுதினேன்.

      முடிவு எப்போதுமே வாசகர்கள் கையில் தானே? இக்கதை படித்த யாருமே விமலன் சாவதை விரும்பவில்லை என்று தெரிகிறது :) :)

      அதோ விபத்து நடந்த அந்த் இடத்தில் இருந்து அவன் செய்தி சேகரிப்பதாக நினைத்துக்கொள்வோம். விமலன் வாழட்டும் :) :)

      Delete
  6. கதை மிக மிக அருமை
    கதைக்களம் வித்தியாசமாக..

    சொல்லிச் சென்ற விதமும்
    முடித்த விதமும் மிக மிக அருமை

    பகிர்வுக்கும் தொடரவும்
    நல்வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி ஐயா... உங்கள் அன்பான வாழ்த்தினால் மகிழ்ந்தேன்.

      Delete
  7. சில நாட்கள் முன்பு ,விபத்தில் கணவன் இறந்த செய்தியை வாசித்த பெண்மணியின் நினைவு வந்தது ஜி :)
    தொடருங்கள் ஜி :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... அந்த வீடியோவை நானும் பார்த்தேன். நன்றி ஜீ... தொடர்கிறேன்

      Delete
  8. மிகுந்த அறிவாற்றல் கொண்ட ஒரு செய்தி சேகரிப்பாளனின் கதை மிக சுவாரஷ்யம்.

    நிச்சயமாக அது விமலனாக இருந்திருக்காது என நம்புகிறேன். கதை மிக உயிரோட்டத்துடன் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அட பார்ரா.... யாருக்கும் சொல்லாம என்பாட்டுக்கு ப்ளாக் எழுதலாம்னா எப்படி மோப்பம் பிடிச்சே..?? :)

      அப்புறம் அது விமலன் தான் :) :) விமலனே தான் 😊😊

      Delete
  9. கதை அருமை .கடைசியில் காதல் தற்கொலைக்கு தூண்டிவிட்டதே இத்தனைவருடம்(10) வருடம் தனியாளாய் இருந்தவன் இறுதியில் கோழையாகிவிட்டான்)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா விபத்து ஒன்று நடந்தது தான் பாஸ். ஆனால் அதில் சிக்கியது விமலன் தானா?

      கொஞ்சம் பொறுத்திருங்கள். ஒரு குட் நியூஸ் இருக்கு :)

      Delete
  10. விதி விளையாட்டு .இன்னொன்று நவீன வாழ்க்கைக்கு நாமும் உள்வாங்கப்படுவதில் தவறில்லை))) மறுமணம் என்பதைச்சொன்னேன்)))

    ReplyDelete
    Replies
    1. முதல் மணம் அப்படியே மனதில் இருக்கும் போது எப்படி மறு மணத்தை நாடுவது பாஸ்? :)

      Delete
  11. அப்புறம் இந்த சிவப்பு ரயில் முழுவதுமாக சேவையில் வந்தது குறுகியகால தான் இடையில் தகர ரயில்)) நீளப்பெட்டி )நீல முட்டை) அப்படியே சிவப்பு என்று காலம் மாறுகின்றது பாரிஸ் போக்குவரத்து ஏனோ (RER-B ) தான் மாறவில்லை)). இப்படிக்கு ) கதையில் லாயிக் தேடுவோர்)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா விடமாட்டீங்க போல கிடக்கு :) :) ஆஆஆ அதுவந்து..RER B தான் போட்டிருக்கோணும். ஒரு சுவாரசியத்துக்காக பிங்கி யை சேர்த்துவிட்டேன்.

      Delete
  12. கார்டிநோட்டு வந்தாலே ஈரோ ஸ்டாரை எட்டிப்பார்ப்பேன் தூரத்துப்பச்சை ஒரு காலத்தில்))) இப்போது தொட்டு விடும் தூரம் தான் )))

    ReplyDelete
    Replies
    1. ஓமோம் முன்பு தூரத்துப் பச்சையாய் இருக்கும் எல்லாமே போகப் போக தொட்டுவிடும் தூரம் தான் :)

      Delete
  13. தாமத வருகைக்கு மன்னிப்பு கோருகிறேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். கடைசி வரியில் வரும் அவர்கள் ட்விஸ்ட் நன்று. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கௌதமன் அண்ணா வாங்கோ... முதல்முறையாக வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

      உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா

      Delete
  14. சுசியை ஒருமுறை பார்க்க வேணும்.பார்த்தயிற்று. கூட்டத்தோடு கூட்டமாக அவனும் நின்றிருப்பான். இனி சுசியைப் பார்க்க வேண்டாம். வேறுயாராவது விபத்தில் போயிருந்தாலும் பொங்கி வரும் கண்ணீரை அடக்க சிரமப்பட்டனர் பிரித்தானியப் பெண்கள் என்று நான் நினைத்தேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ காமாட்சி மேடம்.. உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்தும் எழுத உற்சாகம் தருகிறது. மிக்க நன்றி மேடம்..!

      Delete
  15. நல்ல கதைப்போக்கு. பாராட்டப்படவேண்டியது. இலங்கைத்தமிழின் இனிமை மனதை மயக்குகிறது. கதாநாயகன் இறந்துவிட்டானா இல்லையா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. அதையே ஒரு உத்தியாகவும் கொள்ளலாம் என்று மற்றவர்கள் கூற்றிலிருந்து தெரிந்துகொண்டேன். அது சரி, அந்தப் பெண் எதுவும் பேசவில்லையா? ..
    (வேண்டாம், அதை வேறு யாராவது தன் கதையில் கொண்டுவரட்டும்.)
    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ செல்லப்பா ஐயா...

      உங்கள் வரவும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி தருகிறது.

      அது சரி, அந்தப் பெண் எதுவும் பேசவில்லையா? ..///

      மெளனமாக இருந்தாள் - அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன :) :)

      இலங்கைத்தமிழின் இனிமை மனதை மயக்குகிறது. /// மிக்க நன்றி ஐயா..!

      Delete