Monday, 5 June 2017

பயப்பிடாம வாசிக்கணும்..! ஓகே வா?

”வெளிநாடு என்றால் வான் முட்டும் கட்டிடங்களும் பளபளப்பான சாலைகளும் நிறைந்த ஒரு கனவு உலகமாக இருக்கும்” என்ற கற்பனையோடு பாரிஸ் நகரில் வந்து இறங்கினால், இங்குள்ள குப்பை கூழங்களையும் பாசி படிந்த கட்டிடங்களையும் பார்த்து “ஷாக்” ஆகிவிட்டேன். 

அதிலும் உலகப்புகழ்பெற்ற லூவர் மியூசியம் போனால், எல்லா குப்பைகளும் அழுக்குகளும் பாசிகளும் அங்கதான் நிறைஞ்சிருக்கு. ( அதில்தான் பழமையும் பெருமையும் இருக்கு ). அதோட வான் முட்டும் கட்டிடங்கள் எல்லாம் கிடையவே கிடையாது. ( மொம்பர்னாஸ் டவர், தேசிய நூலகத்தில் அந்த 4 கட்டிடம் மற்றும் பரிஸ் 13 ல் இருக்கும் சில குடியிருப்புக்கள் மட்டுமே உயரமான கட்டிடங்கள் ).

எதனால் பாரிஸில் உயரமான கட்டிடங்கள் இல்லை என்று சிந்தித்தால், இங்கு அத்திவாரம் போட இடமில்லை. அந்தளவுக்கு நிலத்துக்கு கீழே ஒரே ட்ரெயின் மயம்...! 14 லைன்கள் கொண்ட மெட்ரோக்கள் , அதில் 302 புகையிரத நிலையங்கள், 6 பிரதான பெரிய ரெயில்வே நிலையங்கள்.

( அதில் உலகில் மிகப்பெரிய ரெயில்வே நிலையமாகிய Chatelet யும் அடக்கம் ) அதைவிட ஏகப்பட்ட மெட்ரோ பார்க்கிங்குகள்....! 
இவை எல்லாவற்றையும் மண்ணைத் தோண்டி நிலத்துக்கு கீழ கட்டிவைச்சிருக்கிறாங்கள். பிறகு எங்க போய் அத்திவாரம் போடுறது? எங்க போய் உயரமான கட்டிடங்கள் கட்டுறது?

அதிலும் சில ரெயில்வே நிலையங்கள் மிக மிக ஆழமாக இருக்கும். படிவழியே இறங்க இறங்க இறங்கிக்கொண்டே போகும். அந்த அதல பாதாளத்தில் போய் நின்றால் “ஐயோ இடிஞ்சு கொட்டுண்டுடுமோ” என்ற பயமும் வந்துபோகும்.
பாரிஸ் நகரின் நிலத்துக்கு கீழே இதுமட்டும்தான் இருக்கா? இல்லை இன்னும் ஏதேனும் மர்மங்கள் இருக்கா? என்ற கேள்வி எனக்கு ரொம்ப நாளாகவே உண்டு. எல்லா தகவலையும் பொதுமக்களுக்கு சொல்லுவார்களா என்ன? சொல்லப்படாத ரகசியங்கள் இன்னும் இருக்கலாம் என்பதே உண்மை.

அந்தவகையில் சிலநாட்களுக்கு முன்னர் நான் போன இடமும் கேள்விப்பட்ட தகவல்களும் நெஞ்சை உறைய வைப்பவை. அது ஒரு மியூசியம். அந்த மியூசியத்தில் எதை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள் தெரியுமா? செத்துப் போன மனிதர்களின் எலும்புகளும் மண்டையோடுகளும்...! அவ்வளவு பெரிய எண்ணிக்கை எல்லாம் இல்லை, வெறும் 60 லட்சம் பேரின் மண்டை ஓடுகளைத்தான் அங்கு வைத்திருக்கிறார்கள் :) :)
மியூசியத்துக்கு முன்னால் போய் நின்றால், அது, கோழிக்கூடு மாதிரி ஒரு சின்னஞ் சிறிய கட்டிடம். இதுக்க போய் எப்படி 60 லட்சம் பேரின் மண்டை ஓடுகளை வைக்கிறது என்ற கேள்வியோடு, 10 யூரோ டிக்கட் எடுத்து உள்ளே போனால், “இதுக்குள்ள இறங்குங்க ராசா” என்று குழியைக் காட்டினார்கள். அது மிகவும் ஒடுக்கமான 2 மீட்டர் மட்டுமே விட்டம் கொண்ட ஒரு கிடங்கு. படிவழியே அதற்குள் இறங்கினால், போகுது போகுது போய்க்கொண்டே இருக்கு...!


இறங்க இறங்க ஒரு கட்டத்தில் பயம் வந்துவிட்டது. ஒழுங்கான காற்றோட்டம் இல்லை. சுவாசிக்கவே ஒரு மாதிரியாக இருந்தது. சுழன்று சுழன்று இறங்கியதால் தலைவேறு சுற்றியது. ஒருவாறு எல்லாக் கடவுளையும் கும்பிட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருந்தேன். இன்னும் கொஞ்ச தூரம் போனால் பூமியின் மையத்துக்கே போய்விடலாம் போல் இருந்தது.

ஒருவாறு எல்லாப் படிகளையும் முடித்து உள்ளே போனால் “வெல்கம் டூ மண்டைஓடு” போர்டு வைத்திருந்தார்கள் :) :) 


அந்த இடத்தில் இருந்து நீளமான குகை ஒன்று போவது தெரிந்தது. இரண்டு கைகளையும் விரிக்க முடியாத அகலம். வெறும் 6 அடிமட்டுமே உயரம். இதுதான் அந்த குகை. அதற்குள் நடந்து போகோணும். “இது சரிப்பட்டுவராது” என்று புரிந்துவிட்டது. ஏண்டா வந்தோம் என்று ஆகிவிட்டது. கொஞ்ச நேரம் அந்த இடத்தில் நின்று யோசித்தேன். எங்கோ ஒரு தொலைவில் சில ஆட்கள் நடமாடுவது தெரிந்தது. சரி அவர்களை நோக்கி போகலாம் என்று ஓட்டமும் நடையுமாக குகைக்குள்ளால் போனேன். அதுவோ ஒரு முடிவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கு. வளைஞ்சு வளைஞ்சு போய்க்கொண்டே இருக்கு. 


உண்மையில் அங்கு ஒட்சிசனே போதாமல் இருந்தது. மூச்சுத் திணறுவது போன்ற ஒரு ஃபீலிங்கு. அதற்குள் மயங்கி விழுந்தாலோ, ஹார்ட் அட்டாக் வந்தாலோ எப்படிக் காப்பாற்றுவார்கள்? எப்படி மேலே கொண்டுவருவார்கள்? முதலில் கூப்பிட்ட குரலுக்கு யார் தான் ஓடிவருவார்கள்? போன்ற பல கேள்விகள் எழுந்தன.

நான் போய்க்கொண்டே இருந்தேன். வெறும் குகைதான் வந்துகொண்டே இருக்கு தவிர மண்டை ஓடுகளை காணவே இல்லை. இதுக்கு மேலேயும் அவற்றைப் பார்க்கத்தான் வேண்டுமா? இருந்தாலும் 10 யூரோ நஷ்டம் அல்லவா? தொடர்ந்து நடந்தேன். அந்த இடமும் வந்தது. அதுக்கு வேற ஒரு “வெல்கம் போர்ட்...!! அதற்குப் பின்னால், மலை போல குவிந்திருக்கும் மண்டை ஓடுகளைப் பார்த்ததும் என்னவோ செய்தது. கை எலும்புகள், கால் எலும்புகள் எல்லாவற்றையும் பனங்கிழங்கு அடுக்கி வைப்பதுபோல அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். பார்க்கவே பயங்கரமாக இருந்தது. “இவற்றை தொடாதீர்கள்” என்று போர்டு வேற...!  அத்துடன் அங்கே இருக்கும் மிஸ்டர் அண்ட் மிசிஸ் மண்டை ஓடுகள் எந்தெந்த சண்டையில் செத்தவர்கள் என்பதை அறிவிக்கும் பலகைகளும் அங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.


ஓரிடத்தில் நிறைய மண்டை ஓடுகளை அடுக்கி ஒரு பெரிய குடம் போல செய்து வைத்திருந்தர்கள். “கல்லிலே கலைவண்ணம் கண்டான்” என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்களுக்கென்னடா எலும்பிலே கலைவண்ணம் வேண்டிக்கிடக்கு? இப்படி திரும்பும் இடமெல்லாம் ஒரே மனித மண்டை ஓடுகளும் எலும்புகளும் இருப்பதை எவ்வளவு நேரத்துக்குத்தான் பார்ப்பது? எனக்கோ சிறிது நேரத்தில் போரடித்துவிட்டது. இங்கிருந்து தப்பி ஓடினாலே போதும் என்றாகிவிட்டது.

அதனால் மின்னல் வேகத்தில் நடக்க ஆரம்பித்துவிட்டேன். வளைந்து வளைந்து எங்கெங்கெல்லாமோ சுத்தி கடைசியில் Exit இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து பூமியின் மேல்பகுதிக்கு வருவதென்றால் பல படிகள் ஏற வேண்டும். இப்போது முன்னரைவிட ஒடுக்கமான படிகள் வழியே மேலே ஏற வேண்டும். இறங்கும்போது 2 மீட்டர் விட்ட குழிவழியே இறங்கியதாக சொன்னேன் அல்லவா? ஏறும் இடத்தில் இருந்தோ குழியோ 1.5 மீட்ட விட்டமே இருந்தது. ( இதெல்லாம் ரொம்ப அநியாயம் பிரெஞ்சுக்காரங்களா ).

ஏதோ 10 வருஷம் ஜெயிலில் இருந்திட்டு தப்பி ஓடும் ஃபீலிங்கோடு மளமளவென்று ஏறி வெளியே வந்துவிட்டேன். வெளியே வந்து சூரியவெளிச்சம் முகத்தில்பட்டபோது வந்த சந்தோஷம் இருக்கே. அது கோடி யூரோ தந்தாலும் வராது.


வெளியே ஒரு போர்டு வைத்திருந்தார்கள். “நீங்கள் இப்ப எங்கே நிற்கிறீர்கள் தெரியுமா?”என்று கேள்வி கேட்டது அந்த போர்டு. விவேக் ஒரு படத்தில் சொல்வாரே “இங்க குதிச்சேன். அங்க எந்திரிச்சேன்” என்று..! அதுபோலத்தான் இதுவும். எங்கோ இறங்கி எங்கோ ஏறினேன்.

இனித்தான் உங்களுக்கு தலைசுற்றும் தகவலைச் சொல்லப்போகிறேன். அதாக்கப்பட்டது இவ்வளவு நேரமும் நான் மூச்சடக்கி, நேர்த்தி வைச்சு சுத்திப் பார்த்த மண்டைஓடுகள் எல்லாம் வெறும் ட்ரெயிலர் தானாம். மெயின் பிக்‌ஷர் இன்னும் நிறைய இருக்காம். ஆனால் அவற்றைப்  பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லையாம். அதுபடு ரகசியமாம். உண்மையில் இந்த நிலக்கீழ் சுரங்கத்தின் மொத்த நீளம் 245 கிலோ மீட்டர்களாம். அதுபூராவும் மண்டை ஓடுகள்தானாம். பாரிஸ் நகரில் உள்ள அத்தனை வீதிகளின் கீழ்பகுதி பூராகவும் இந்த மண்டையோட்டுக் குகை இருக்காம். உலகில் மிகப்பெரிய சுடலையும் இதுதானாம்.

உண்மையில் மொத்த பாரிஸ் நகரமுமே ஒரு சுடலையின் மீதுதான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதை அறியும்போது நடுக்கமாக இருக்கிறது. 

16 comments:

  1. எனக்கு வெகுநாட்களாகவே ஐயம் இருந்தது வானுயர்ந்த கட்டிடங்கள் இல்லாததின் காரணம் இன்று அறிந்தேன் நண்பரே... நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர் ஜீ.. பிரான்சில் வானளாவிய உயர்ந்த கட்டிடங்கள் கட்ட அனுமதி இல்லை. ஈபிள் கோபுரத்தைவிட உயரமாக எதுவும் கட்டப்படக் கூடாது என்பது இங்குள்ள சட்டம்.

      Delete
  2. பாரிஸை பார்க்க வேண்டுமென்ற ஆசையைத் தூண்டிவிட்டீர்கள் ,தீவிரவாத தாக்குதல்கள் தான் பயமுறுத்துது :)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஜீ :) :)

      இங்கு எந்தநேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாதுதான். ஆனால் அதையெல்லாம் பார்த்தால் வாழ முடியாது ஜீ :)

      Delete
  3. 245 கிலோ மீட்டரா...? வியக்க வைக்கும் தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ....இதில் 1 கிலோமீட்டர் மட்டுமே பொதுமக்களுக்கு..! மிகுதி எல்லாம் மூடி வைத்திருக்கிறார்கள்.

      Delete
  4. இவர்கள் எந்த மாதிரியான ரசனை
    கொண்டவர்கள்
    இதைப் படிக்கும் முன் பாரீஸ் நகரம்
    மீது கொண்டிருந்த ஒரு கனவு மயமான
    சுகந்தம் சட்டென மாறுவதைப்போல
    உணர்கிறேன்
    இதுவரை அறியாதது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயோ ரமணி சேர், அந்த கனவு மயமான சுகந்தத்தை மாற்றிட வேண்டாம். இங்கு நிறையவே நல்ல விஷயங்களும் உள்ளன. இந்த மண்டையோடுகளை ஏன் லட்சக்கணக்கில் குவித்து வைத்திருக்கிறார்கள் என்றுதான் எனக்கும் புரியவில்லை :)

      Delete
  5. அட இது எல்லாம் பாரம்பரிய சேமிப்பு)) ஆனாலும் மண்டை ஓடு நல்லது தானே மண்டையன் குழுவே தெரிந்த இனம் தானே))) தில் உங்களுக்கு அதிகம் பல இடம் பார்க்கின்றீங்க)))

    ReplyDelete
    Replies
    1. மண்டையன் குழுவா..?? அடடா அதையேன் ஞாபகப்படுத்துறீங்க பாஸ்..? பயமா இருக்கு :) :)

      கிடைக்கும் சின்னச் சின்ன இடைவேளைகளில் எல்லா இடமும் ஓடுகிறேன். இன்னும் தகவல்கள் இருக்கு. பேசுவோம்.

      Delete
  6. புதிய தகவல். சுவாரஸ்யமான பதிவு. நீங்கள் மட்டுமா போனீர்கள்? மக்கள் கூட்டம் எதுவுமே (பார்வையாளர்கள்) இருக்க மாட்டார்களா? எனக்கும் பனம்பழம் அடுக்கி வைத்திருப்பது போலத்தான் தோன்றியது? நாற்றம் வராதோ?

    ReplyDelete
    Replies
    1. உல்லாசப் பயணிகள் நிறைய வருவார்கள் சகோ.. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உள்ளே விடுவார்கள். ( குறுகலான இடம் என்பதால் )

      நாற்றம் ஏதும் வராது. எல்லாவற்றையும் சுத்தமாக அடுக்கி, பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.

      மற்றது தரை மட்டத்தில் இருந்து 150 அடி ஆழத்தில் உள்ளது இது :) :)

      Delete
  7. https://senthilmsp.blogspot.com/2017/06/Catacombs-of-Paris.html

    ReplyDelete
  8. நண்பர் திண்டுக்கல் தனபாலன் மூலம் தங்கள் தளம் அறிமுகமானது. வசீகரமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ செந்தில்குமார். முதல் முறையாக வந்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன் :) :)

      'வசீகரமாக' - மனதைத் தொட்ட வார்த்தை சகோ. மிக்க நன்றி

      Delete