Monday, 26 June 2017

ஒருநாளும் உனைமறவாத.....!!

’கரு தருவது நாங்கள். கதை எழுதுவது நீங்கள்’ என்றார்கள் ‘நம்ம ஏரியா’ ப்ளாக் நண்பர்கள். அவர்கள் கரு தர, அதற்கு நாம் கதை எழுதுவது, ஒரு சுகமான அனுபவம். முன்பு அவர்கள் தந்த கரு  இங்கே - அதற்கு நான் எழுதிய கதை - இங்கே

இப்போது மீண்டும் ஒரு சுவாரசியமான கரு ஒன்றைத் தந்து, நம் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டிருக்கிறார்கள்.  இங்கே  சென்று அந்தக் கருவைப் படித்துவிட்டு, கீழே கதையைப் படிக்க வாருங்கள்.

ஒரே ஒரு சின்ன வேண்டுகோள். கதையைப் படித்துவிட்டு,  மறக்காமல் அந்தப் பாடலைக் கேளுங்கள்.

போகலாமா.....??

*** **** *** 

ல்லை, இதுக்குமேலேயும் நான் அவனை மறக்காவிட்டால், என் நிலைமை மோசமாகிவிடும். அவனை இப்போதே மறந்து தொலைக்கிறேன்’ என மனதுக்குள் சபதம் எடுத்த ரமா, பேஸ்புக் மெசெஞ்சரில் அவன் அனுப்பிய சில குறுந்தகவல்களை மள மளவென அழிக்க ஆரம்பித்தாள். 

அவன் அனுப்பும் தகவல்களை ரமா அழிப்பது இது ஐந்தாம் முறை. ஒவ்வொரு முறையும் ‘இனி அவனோடு பேசுவதே இல்லை’ என்று முடிவெடுப்பாள். அவளின் இஷ்ட தெய்வத்துக்கு நேர்த்தியெல்லாம் வைப்பாள். அவனது இலக்கத்தை வைபரில் ப்ளொக் செய்வாள். அவனது பதிவுகள் தன் கண்ணிலே பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தன்னுடைய பேஸ்புக்கை டீ ஆக்டிவேட் செய்வாள்.

எதுவுமே 24 மணிநேரம் கூட தாங்காது. மறுபடியும் ஃபேஸ்புக் வருவாள். அவளாகவே ‘குட் மோர்னிங்’ என்று அவனுக்கு மெசேஜ் அனுப்புவாள். ‘நான் திருந்திவிட்டேன். இனிமேல் உங்கள் மனம் நோகும்படி நடக்க மாட்டேன். நீங்கள் சொல்வது போல நாங்கள் நண்பர்களாகவே இருப்போம்’ என்று அவனோடு பேசத் தொடங்குவாள். 

விமலனும் வழக்கம் போல ‘இனிமேலாவது மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்’ என்று ஆங்கிலத்தில் பதில் போடுவான். 

எவ்வளவுதான் தலைகீழாக நின்று காதலித்தாலும் என்னதான் அன்பை அள்ளிக்கொட்டினாலும் விமலனின் மனம் மாறவே மாறாது என்பது ரமாவுக்கு நன்கு தெரியும். அவனின் மனதில்தான் ஏற்கனவே சுசி இருக்கிறாளே..! பிறகெப்படி அவனால் ரமாவின் ‘திடீர் காதலை’ ஏற்றுக் கொள்ள முடியும்? ரமாவும் கடந்த ஆறு மாதங்களாக எவ்வளவோ பாடுபட்டுவிட்டாள். ஒரு பெண் என்பதையும் மீறி, தன் காதலை பல விதங்களில் பலமுறை வெளிப்படுத்தியும் கூட, விமலனின் மனதிலே அவளால் ஒரு இஞ்சிகூட இடம்பிடிக்க முடியவில்லை. அவனோ தன் மனதில் இருப்பதை உறுதியாகவும் ஆணித்தரமாகவும் பலமுறை ரமாவுக்கு விளக்கமாகக் கூறிவிட்டான். ஆனால் ரமாவின் மனது கேட்டால் தானே? 

இதோ, பரிஸ் மாநகரின் 19 ம் வட்டாரத்தில் உள்ள Parc des Buttes-Chaumont எனும் இந்த அழகிய பூங்காவில் ரமா அமர்ந்திருக்கிறாள். சற்றுமுன்னர் கடும் கோபத்தோடு, விமலன் திட்டியது அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. 

‘ரமா, உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது? எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. என் மனைவி சுசி, பிரித்தானியாவில் எனக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறா. நான் விரைவில் அங்கு போகப் போகிறேன். நீங்கள் வீணாக ஆசையை வளர்க்க வேண்டாம். இதெல்லாம் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். கெடுகுடி சொற்கேளாது என்பார்கள். அது நீங்கள் தான்’ 

ஒருவகையில், தான் விமலனுக்குத் தொல்லை கொடுப்பதை ரமா உணரவே செய்தாள். ‘பாவம் அவர். எப்போதும் சுசியின் நினைப்பாகவே இருக்கிறார். அவரை நான் இப்படி தொல்லைகொடுப்பது நியாயமே இல்லை. அவர் நினைத்தால், இப்போதே என்னை ப்ளொக் செய்ய முடியும். ஆனால் நண்பனாக பழகிய ஒரே காரணத்துக்காக, என்னை மதித்து இன்னமும் அமைதியாக இருக்கிறார்.’


‘விமலனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அறிந்தவுடன் நான் விலகித்தானே போனேன். என்பாட்டில் அமைதியாக இருந்தேனே? ஆனால் ‘விமலனுக்கும் சுசிக்கும் இடையே ஏதோ பிரச்சனை. இருவரும் பிரிந்துவிட்டார்கள்’ என்று  வான் ட்ரைவர் ரூபன் அங்கிள் சொன்னதில் இருந்துதானே, நான் இப்படிப் பைத்தியமாகிப் போனேன். உண்மையில் சுசிதான் கோபித்துக் கொண்டு, விமலனோடு பேசாமல் இருக்கிறாளே தவிர, இந்த விமலன் எப்போதும் சுசி சுசி என்று தானே புலம்பிக்கொண்டிருக்கிறான்..!

என்றாவது ஒருநாள் இவன் சுசியை மறந்துவிட்டு, இயல்புக்குத் திரும்ப மாட்டானா?  என் காதலை ஏற்க மாட்டானா? என என் மனம் ஏங்குகிறதே..!’ 

எனப் பலவாறாக ரமா சிந்திக்கலானாள்.

பூங்காவிலே குளிர் நீர் விற்றுக்கொண்டிருந்த அந்த பங்களாதேஷ்காரன் இவளின் அருகே வந்து ‘மேடம் தண்ணி வேணுமா? ஒரு யூரோ மட்டும்தான்’ என அரைகுறை பிரெஞ்சில் கேட்க, இரண்டு யூரோக்களை அவன் கையிலே திணித்துவிட்டு, தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கி, மடமடவெனக் குடித்தாள் ரமா. 

அவளது நினைவலைகளோ, விமலனைவிட்டு ஒரு அங்குலம் கூட விலகவில்லை..! 

முதல்முறையாக ஆங்கில வகுப்பு ஒன்றிலே விமலனும் ரமாவும் அறிமுகம் ஆகிறார்கள். லண்டனைச் சேர்ந்த Lewis எனும் ஆங்கிலப் பேராசிரியர் பரிசிலே  பகுதிநேரமாக ஆங்கிலம் கற்பித்தார். ‘பிரித்தானியர்களைப் போலவே ஆங்கிலம் உச்சரிப்பது எப்படி?’ என்று அவர் கற்பிக்கலானார். அந்த வகுப்புக்குத்தான் இவர்கள் இருவரும் சென்றிருந்தார்கள். அங்கு விமலனும் ரமாவும் மட்டுமே தமிழர்கள். விமலனின் ஆங்கில உச்சரிப்பு ரமாவை மயக்கிப் போட்டது. 


‘என்ன நீங்கள், பிரிட்டிஷ்காரர்களையே மிஞ்சிடுவீங்கள் போல.. பேசாம உங்க பேரை வில்லியம் விமலன் என்று மாத்துங்கோ’ என்று சிரிப்புடன் கூறியவாறே விமலனோடு பேச வந்தாள் ரமா. சம்பிரதாயத்துக்கு ‘நன்றி’ சொல்லிவிட்டு, விமலன் நகர்ந்தான். என்றாலும் ‘நீங்க ஊரில எவடம்? எங்கேயோ கண்டதுபோல இருக்கே’ என ரமா பேச்சுக்கொடுக்க, அப்படியே பேசிப் பழகி நாளடைவில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். 

சந்தித்த முதல்நாளே, சுசியைப் பற்றி ஒன்றுக்கு பத்துமுறை ரமாவிடம் போட்டு வைத்தான் விமலன். ரமாவும் மனதிலே எதுவும் இல்லாமல் நட்போடு மட்டுமே பழகிவந்தாள். ஆனால் ரமாவின் தூரத்து உறவினரான, வாகனச் சாரதி ரூபன் ஒருமுறை விமலன் - சுசிக்கு இடையிலான பிரிவை, ரமாவிடம் சொல்லிவிட்டார். அன்றில் இருந்து விமலன் மீது ரமாவுக்கு ஒருவித ஈர்ப்பு உண்டாயிற்று. 

‘சும்மா நடிக்காதேங்கோ விமலன். எனக்கு எல்லா உண்மையும் தெரியும். சுசி இனி உங்களோட கதைப்பா என்ற நம்பிக்கை எனக்கில்லை. அவா சரியான உறுதியாத்தான் இருக்கிறா. நீங்கள்தான் சும்மா லூசு மாதிரி சுசி சுசி என்று புலம்புறீங்கள். அவாவை மறந்திட்டு உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையைத் தேடுறதுதான் நல்லது. 

நீங்கள் எவ்வளவு திறமையானவர்.? உங்கட இங்கிலீசைப் பார்த்து வெள்ளைக்காரிகளே பின்னால வருவாளவை’ என்று ஏதேதோ புலம்பினாள் ரமா. 

விமலனின் முகம் கோபத்தில் சிவந்தது. ’ரமா, அனாவசியமாக என் பிரெண்ட்ஷிப்பை இழக்கப் போறீங்க. தற்ஸ் ஓல்’ எனக் கூறிவிட்டு, கோபத்தோடு போய்விட்டான் அவன். 

ரமாவுக்கு கோபமே வரவில்லை. அவள் காதலில் மிதந்தாள். தன்னை   விமலன் திட்டுவதுகூட அவளுக்குத் தேனாக இனித்தது. இலங்கையில் யுனிசெப் நிறுவனத்தில் ‘கோடினேற்றிங் அதிகாரி’யாகப் பணிபுரிந்தவள் ரமா. அங்கேயே ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபா மாத சம்பளம் வாங்கியவள். ஒருமுறை வன்னியிலே, ஒட்டுசுட்டானில் இடம்பெயர்ந்த மக்களுக்கு யுனிசெப் நிறுவனம் சார்பாக உணவுப் பொருட்கள் வழங்க, கொழும்பில் இருந்து சென்றிருந்தாள் ரமா. அந்த உணவுப் பொருட்களை கியூவில் நின்று வாங்கிய அகதியாக அங்கே நின்றிருந்தான் விமலன். 

இன்று காலம் முற்றுமுழுதாக மாறி, பிரான்சிலே இருவரும் நண்பர்களாகி, விமலன் மீது காதலிலும் விழுந்துவிட்டாள் ரமா. ஒட்டுசுட்டானில் அகதியாக கியூவில் நின்று நிவாரணம் வாங்கிய விமலன் எங்கே? இங்கே பரிசில் கையில் ஐ போன் 7 உடன் பம்பரம் போலச் சுழன்று திரியும் விமலன் எங்கே? 

ரமா பூங்காவுக்கு வந்து இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. இன்று விமலனின் உச்சக்கட்ட கோபத்தை ரமா பார்த்துவிட்டாள். அவனோ சுசியை மறக்கப்போவதும் இல்லை ரமாவின் காதலை ஏற்கப் போவதும் இல்லை. இதெல்லாம் ரமாவுக்கு நன்கு தெரிந்தே இருந்தது. அவள் தன் மனதைக் கட்டுப்படுத்த முயன்றாள். ‘வேண்டாம்..! இந்த விமலன் எனக்கு வேண்டவே வேண்டாம்..! அவன் இன்னொருத்தியின் புருஷன்’ என்று ரமா தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். 

சில நாட்களுக்கு முன்னர், சுசி தன் புதிய கணவன் கோபியோடு பரிசுக்கு வந்ததையும் அவர்களை வரவேற்று அழைத்து வந்து ஹொட்டேலில் விட்டதையும் விமலன் ரமாவிடம் இன்னமும் கூறவில்லை. அவனோ மிகவும் அப்செட்டாக இருந்தான். ஒருவேளை சுசிக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை ரமா அறிந்தால், அவளைப் போல மகிழ்ச்சியடைய இந்த உலகில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். இனி விமலன் எனக்குத்தான் என அவள் வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிப்பாள். 

சுசியைப் பார்த்த அந்தக் கணத்தோடு விமலனின் மனம் சுக்குநூறாய் உடைந்து போயிருந்தது. மறுநாள் காலை 9 மணிக்கு வந்து சந்திப்பதாகச் சொல்லிச் சென்றவன், தன்னுடைய சக வழிகாட்டியாகிய அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவனிடம் சுசியும் கணவனும் தங்கியிருந்த ஹொட்டேல் முகவரியைக் கொடுத்து அனுப்பியிருந்தான். தனக்கு உடல்நிலை சரியில்லை என பின்னர் கோபிக்கு மெசேஜ் போட்டிருந்தான். 


நண்பகல் ஒருமணி ஆகிவிட்டது. ’விமலனை மறந்து தொலைப்பது’ என்கிற ரமாவின் தீர்மானம் மெல்ல மெல்ல கரைய ஆரம்பித்தது. அவளால் விமலனை மறக்கவே முடியவில்லை. வைபரை எடுத்து, அவன் ‘ஒன்லைனில்’ இருக்கிறானா என்பதை செக் பண்ணினாள். இருக்கிறான்...!

என்றாவது ஒருநாள் சுசியை மறந்துவிட்டு, விமலன் தன்னிடம் வருவான் என அந்தப் பேதை மனம் நம்பியது. 

அதேநேரம் சென் நதிக்கரையில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் முன்னோட்டத்தைப் படம்பிடிக்க ஆவலோடு  சென்று கொண்டிருந்தான் விமலன். அவனது நினைவுகள் சுசியையே சுற்றிச் சுற்றி வந்தன. ஜீ மெயிலைத் திறந்து சுசி முன்னர் அனுப்பிய மடல் ஒன்றை வாசித்துக்கொண்டே நடந்தான் அவன். 

தண்ணீர்ப் போத்தலை குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிந்த ரமா,  எழுந்து நடக்கத் தொடங்கினாள். அவளது மனம், இப்போது முற்றுமுழுதாக விமலனின் நினைப்பில் மூழ்கிக் கிடந்தது. ஃபேஸ்புக்கை திறந்து விமலனின் போட்டோக்களைப் பார்த்தவாறே நடக்கலானாள் அவள்.......!!!!!

அப்பொழுது எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்தது, அந்த இனிமையான பாடல்!  பாடலைப் பாடிய பி சுசீலா, அவளுக்காகவே அந்த வரிகளைப் பாடியது போலிருந்தது!  - இதோ இங்கிருந்து....

( யாவும் கற்பனையே ) 

40 comments:


 1. ரமா ஏன் ஒரு யூரோவுக்கு ரெண்டு யூரோ வீண் செய்தாள்? மனக்குழப்பம்?

  நன்றாக எழுதி இருக்கிறீர்கள். எங்கே விமலானும் வாசகர்களை யோகத்தில் ஆழ்த்தி ஏதாவது செய்து விடுவானோ என்று பயம் தோன்றியதும் உண்மை!

  அருமையான சுசீலாம்மா பாடலைப் பகிர்ந்திருக்கிறீர்கள். பாடல் முழுவதும் கேட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீ,

   பொதுவாக, இங்கு வதிவிட உரிமை இல்லாதவர்கள் இப்படியான வியாபாரத்தில் ஈடுபடுவதுண்டு.. ( தண்ணீர் போத்தல், பூமாலை போன்றவை விற்றல் ) அவர்களைப் பார்க்க பாவமாக இருக்கும். அதனால் ஒரு யூரோ கேட்டாலும் இரண்டு யூரோ கொடுப்பது வழக்கம்..!

   எங்கே விமலானும் வாசகர்களை யோகத்தில் ஆழ்த்தி ஏதாவது செய்து விடுவானோ என்று பயம் தோன்றியதும் உண்மை! // ஹாஹா போன முறை, ‘தற்கொலை’ ட்விஸ்ட் வைத்து, உங்களிடம் எல்லாம் வாங்கிக் கட்டினேன் இல்லையா? அதனால் இம்முறை அலேர்ட் ஆகிவிட்டேன் ஸ்ரீ :) :)

   அருமையான சுசீலாம்மா பாடலைப் பகிர்ந்திருக்கிறீர்கள். // மிக்க நன்றி. நீங்கள் போட்ட நிபந்தனையை மீறவில்லை நான் :) :)

   Delete
 2. விமலனுக்காகவும் ரமாவுக்காகவும் அனுதாபப்படத் தூண்டுகிறது உங்கள் எழுத்து. சுவையாகக் கதை சொல்ல முடிகிறது உங்களால். இனியும் எழுதுங்கள்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பசி ஐயா... உங்கள் அன்பான வாழ்த்தினால் மகிழ்ந்தேன். இனியும் எழுதலாம் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

   சுவையாகக் கதை சொல்ல முடிகிறது உங்களால் ///

   மிக்க நன்றி ஐயா... இந்த ஒரு வரி போதும் :) :)

   Delete
 3. ரமாவின் காதல் ஒரு தலைக் காதல் என்று முடிக்கப்போகிறீர்கள் என நினைத்தேன். கதையின் முடிவு எதிர்பாராதது. கதையை நன்றாக கொண்டு போயிருக்கிறீர்கள். பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சபாபதி ஐயா... உங்கள் வரவும் வாழ்த்தும் மகிழ்ச்சி தருகிறது. முதல் முறையாக வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்..!!

   Delete
 4. உண்மையான அன்பு மாறாது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி,

   அது ஒருபோதும் மாறாது. நீறு பூத்த நெருப்பாகவேனும் இருக்கும்..!

   Delete
 5. விமலன், 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்று சொல்லி, சுசியை 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்தி, ரமாவை 'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு' என்று அழைத்துக்கொள்வான் என்று பார்த்தால், ....

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா வாங்கோ கௌதமன் அண்ணன்,

   சுசியை 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்தி // ஹாஹா அதுக்கு விமலனின் மனது இடம் கொடுத்தால் தானே? அவனோ சுசியை மறக்க முடியாமல் அல்லவா திண்டாடுகிறான் :) :)

   மிக்க நன்றி அண்ணன்

   Delete
  2. என்ன எண்ணம் கேஜிஜி சாருக்கு. நானே இவனின் அன்பை, மனதை சுசி புரிந்துகொள்வாளா (அவள்தான் எங்கேயோ இருக்காளே), ரமாவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறாளே அவள் நிலையும் பரிதாபமாக இருக்கிறதே என்று பார்த்தால், 'த்ரிஷா இல்லைனா நயனதாரா' - எங்க வந்து என்ன படம் ஞாபகம் வருது. நானே அந்தப் படம் ரொம்ப ஆபாசமாக இருக்கிறது என்று முழுவதுமாகப் பார்க்கமுடியாமல் இருந்தேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

   Delete
  3. ஹா ஹா நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை நெல்லை ஜீ.....

   Delete
 6. அருமையான பாடல்! பொருத்தமான தேர்வு! இரண்டு கதையையும் இணைத்தது அதை விட அருமை! நன்றாக எழுத வருகிறது உங்களுக்கு! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா மேடம்.. முன்னைய கதையில் விமலனுக்கு என்னாச்சு? என்று நீங்கள் எல்லோரும் என்னோடு கோபித்துக் கொண்டீர்கள் அல்லவா? :) :)

   அதுதான் அவனை இங்கே கொண்டு வந்தேன்..!

   அருமையான பாடல்! பொருத்தமான தேர்வு! // மிக்க நன்றி... இன்னும் பொருத்தமாக இருக்கட்டும் என்பதற்காக, முன் இசையை வெட்டிவிட்டு, நேரடியாக சரணத்தில் இருந்து துவங்குமாறு போட்டுள்ளேன்.

   மிக்க நன்றி கீதா மேடம்...!!

   Delete
 7. அழகான கதை.. மூன்று வெவ்வேறு
  திசைகளில் செல்லும் மனங்களை, ஒரு கதைக்குள் கொண்டுவந்தது அருமை.

  முன்னைய கதையுடன் லாவகமாகபிக்கையை கோர்த்ததும்... அதை நம்பும்படி எழுதியதும் சூப்பர்!!

  ரமா விமலன் மீது காதல் கொண்ட அந்த சம்பவத்தை பிறிதொரு கதையில் சொனால் இன்னும் ஏக பொருத்தமாய் இருக்கும்..

  நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேன்..!

   ரமா விமலன் மீது காதல் கொண்ட அந்த சம்பவத்தை பிறிதொரு கதையில் சொனால் இன்னும் ஏக பொருத்தமாய் இருக்கும்.. //

   அதை ஒரு தனிக்கதையில் சொல்லத்தான் எனக்கும் விருப்பம். சுவாரசியமான பல சம்பவங்கள் உள்ளன. அவற்றைக் கதைக்குள் கொண்டு வரலாம் :) :)

   பார்ப்போம், ‘எங்கள் ப்ளாக்’ நண்பர்கள் அடுத்து என்ன கரு தரப்போகிறார்கள் என்று..! அவர்களின் அடுத்த கருவில், ரமாவின் கதையைச் சேர்த்துட வேண்டியதுதான் :) :)

   I'm waiting :)

   Delete
 8. கதை நல்லா இருந்தது. பாடலும் நல்ல பொருத்தம். பாடலை ரசிக்கும் தன்மையுள்ளவளுக்கு விமலனின் போக்கைப் புரிந்துகொள்ளமுடியவில்லையே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லை ஜீ..!

   விமலனின் மன உறுதி ரமாவுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அவளை காதல் பாடாய்ப்படுத்துகிறது. அதுதான் மேட்டர் ஜீ :) :)

   Delete
 9. எதிர்பாரா முடிவு... தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி... முடிவை ரசித்தீர்களா? ரமாவும் விமலனும் சேருவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா சகோ? :) :)

   Delete
 10. ரமாவின் காதல் இருதலைக்கொல்லி போல))) வித்தியாசமான எழுத்துநடை . சுசியின் மனமும் சிந்திக்க வைக்கின்றது காதலை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பாஸ்... சுசிதானே வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கிப் போயிட்டா :)

   ரமா கொள்ளி எறும்புதான் :) :)

   Delete
 11. இன்றைய காதலர்களுக்கு வைப்பர், முகநூல் , மேசெஞ்சர் வருகை வரப்பிரசாதம் ரமா இதன் மூலம் தானே விமலனை தெரிந்துகொண்டாள்)))

  ReplyDelete
  Replies
  1. ஓமோம்... இவை எல்லாம் காதலின் தூதுவர்கள் பாஸ் :) :)

   Delete
 12. அருமையான பாடல் சூழலுக்கு ஏற்றவாறு அப்ப ரமாவுக்கும் சுசிலா பாடல் பிடிக்கின்றதே)))யூத் ஆண்டி இந்தியன்)))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா சுசீலா பாடல் தான் போட வேண்டும் என்பது 'எங்கள் ப்ளாக்' நண்பர்களின் நிபந்தனை. பொருத்தமான பாடல் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே

   Delete
 13. இப்படி எல்லாம் கதை எழுத தனிமரத்துக்கு தோன்றுதில்லையே! இந்தப்பார்க்குப்பக்கம் ஒருதடவை போன நினைவுண்டு!

  ReplyDelete
  Replies
  1. அப்படிச் சொல்லக் கூடாது. நீங்களும் எத்தனையோ தொடர்கள் எழுதிய அனுபவம் மிக்கவர். இன்னும் எழுதுங்கோ :)

   இந்தப் பார்க் 7bis métro வில் இருக்கிறது

   Delete
 14. தலைப்பில் இருக்கும் பாடலைத்தான் இறுதியில் இணைத்து இருப்பீர்கள் என நினைத்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது ,ஆனால் கதை சொல்வதில் நீங்கள் ஏமாற்றவில்லை :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜீ...

   அது எஸ்பிபி - ஜானகி பாடிய பாடல். போட்டி நிபந்தனைப்படி இணைக்க முடியாது ஜீ. அதான் சுசீலாம்மா பாட்டு போட்டேன்.

   மிக்க நன்றி ஜீ

   Delete
 15. மன ஓட்டங்களைப் பதிவு செய்த விதம்
  அருமை.கதையை மீறி உணர்வாகவே
  உணர முடிந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி ஐயா..உங்கள் அன்பான வாழ்த்தும் ஆசீர்வாதமும் மகிழ்ச்சி தருகின்றன.

   Delete
 16. மானங்கெட்ட மனசு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ,

   ரமாவின் மனசா? விமலனின் மனசா? :)

   Delete
  2. இருவர் மனதும்....

   Delete
 17. Replies
  1. நன்றி சகோ மொஹம்மட்.

   உங்களுக்குப் பிந்திய பெருநாள் வாழ்த்துக்கள்.

   Delete
 18. அருமை! முதல் கதையை இதோடு இணைத்த திறமை போற்றுதலுக்குரியது. பிரமாதமாக எழுத வருகிறது உங்களுக்கு. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பானுமதி மேடம்..! உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. I'm really happy madam..!

   Delete
 19. இந்த மனஸுக்குக் கடிவாளம் போட முடியாமல்தான் திண்டாடுகிரார்கள். அழகாக கதைகளை ஜோடி சேர்த்திருக்கிறீர்கள். அவர்களால்தான் ஜோடிசேர முடிாமல் மன உளைச்சல். நன்றாக இருக்கு அன்புடன்

  ReplyDelete